Saturday, June 4, 2011

குடி வெறி நீங்க உதவும் எளிமையான வைத்தியம்..


இன்றைய வாழ்வில் ஒரு சிலர் மட்டும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி அதிலிருந்து மீள முடியாமல் கவலையுடன் வாழ்க்கையை நகர்த்த வேண்டி உள்ளது.அப்படி கவலை படுபவர்களுக்காக மிளகாய் செடி இலை , இலவங்கப்பட்டை , சர்க்கரை சேர்த்து நீரில் வேக வைத்து குடிக்க கொடுத்தால் குடி வெறி, சாராயம் குடிக்கும் எண்ணம் குறையும்.

Friday, April 29, 2011

சிவனருளால் சிறுநீரகங்களைச் சீராக்கும் சிறுபீளை!


சிவனருளால் சிறுநீரகங்களைச் சீராக்கும் சிறுபீளை!
43
சித்த மருத்துவ நிபுணர் அருண்சின்னையாவாழ்க்கை உணர்வுப்பூர்வமாக வாழப்பட வேண்டும். நுட்பமான உணர்வுகளே நம்மை இறையருளை நாடச்செய்து- இறைவனின் பேரருளைப் பெறச் செய்யும். மனம்போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், ஒரு கட்டத்தில் நாம் வெறுமையாய் உணர்வோம். இன்ப- துன்பங்களும் மேடு- பள்ளங்களும் நிறைந்த இந்த வாழ்க்கையில் பிறவிப் பேறை அடைவதே இந்த பிறவி எடுத்ததன் பயன் ஆகும்.

உணவு விஷமித்தால் உடலும் விஷமாகும். அத்துடன் மனமும் விஷமித்து நம் சிந்தனையும் விஷமாகும். ஆக, நீலகண்டனாம் சிவபெருமானின் அருள் பெற்ற நடமாடும் சித்தனாம், சிறு பீளையைச் சரணடைந்து நலம் பெற முனைவோம், வாருங்கள்.

தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருநாளில் நம் இல்லமெல்லாம் அலங்கரிக்கும் சிறுபீளையைப் பார்த்திருப்பீர்கள். சிறுசிறு வெண்ணிறப் பூக்கள் கொண்டு பார்ப்பதற்கு மிக அழகாய் இருக்கும். இதனை சித்தர்கள் "பாஷாணபேதி' என்று சொல்வார்கள். அதாவது சித்தர்கள் தங்களது மருந்து செய்முறையில் 64 வகையான பாஷாணங்களைக் கையாண்டு வந்தார்கள். 64 பாஷாணங்களையும் சுத்தி செய்து அவற்றை மருந்தாக்கி கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளித்து வந்தனர். இப்பொழுதும் 64 பாஷாணங்களைக் கொண்டு சித்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய பாஷாணங்களைக் கொண்டு செய்யப்படும் சித்த மருந்துகளிலும், சில நேரங்களில் பக்க விளைவுகள் ஏற்படுவது உண்டு. அத்தகைய பாஷாணங்களினால் ஏற்படும் பக்க விளைவுகளை முழுமையாகக் குணப்படுத்தும் தன்மை சிவன் அருள் பெற்ற சிறுபீளைக்கே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

நமது உடம்பில் ரத்த சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது நமது சிறுநீரகங்களாகும். சிறுநீரகங்கள் உணர்வுப் பூர்வமான உறுப்பாகும். சிறுநீரகங்களில் உண்டாகும் சிறுநீரகக் கட்டி, சிறுநீரக வீக்கம், சிறுநீரகங்கள் சுருங்கிப் போதல், சிறுநீரகங்களில் உண்டாகும் சீழ் வியாதிகள், சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத் தொற்று வியாதிகள், சிறுநீர் அதிகமாகப் போதல், நீர் சுருக்கு, நீர் கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற வியாதிகளுக்கு மிகச் சிறந்த பலனைத் தரும் மாமருந்து இந்த சிறு பீளையாகும்.

மேலும் உடல் பருமன், வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை கோளாறுகள், ஆண்மைக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

ரத்தத்தில் உப்பு அதிகரிப்பதைக் குறைக்க...

நெருஞ்சில் 50 கிராம், சீரகம் 50 கிராம், சோம்பு 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம் என சம அளவு எடுத்துக்கொண்டு, அவற்றைக் காய வைத்து தூள் செய்து கொள்ளவும். இந்தத் தூளை காலை- இரவு இரு வேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரவும். அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வர, ரத்தத்தில் உள்ள உப்பு அதிகரிப்பைக் குறைக்கும்.

சிறுநீரக வியாதிகள் தீர...

நெருஞ்சில் 50 கிராம், சாரணை வேர் 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம், சோம்பு 50 கிராம், சீரகம் 50 கிராம், சதகுப்பை 50 கிராம், கீழாநெல்லி 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். சோம்பு, சீரகத்தை இளவறுப்பாய் வறுத்துக்கொள்ளவும். பின்னர் அனைத்துச் சரக்குகளையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும், இந்த தூளை தினமும் காலை- இரவு உணவுக்குப் பின் 25 கிராம் அளவு தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக வியாதிகள் தீரும்.

சிறுநீரகக் கற்கள் கரைய...

மாவிலங்கப்பட்டை 20 கிராம், நெல்லிக்காய் 20 கிராம், கடுக்காய் 20 கிராம், தான்றிக்காய் 20 கிராம், நெருஞ்சில் 20 கிராம், சீரகம் 20 கிராம், சோம்பு 20 கிராம், தனியா விதை 20 கிராம், சதகுப்பை 20 கிராம், சிறுபீளை வேர் 20 கிராம் எடுத்து சுத்தம் செய்துகொள்ளவும். அதை இரண்டு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் தண்ணீராகக் சுண்டச் செய்த பிறகு, அந்த தண்ணீரை காலை- மாலை இருவேளையும் தொடர்ந்து குடித்து வர, சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.

வெள்ளைப்படுதல் நீங்க...

அம்மான் பச்சரிசி 20 கிராம், பாதாம் பிசின் 20 கிராம், சிறுபீளை வேர் 20 கிராம், அதிமதுரம் 20 கிராம், மஞ்சள் 20 கிராம் எடுத்துக் காயவைத்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் நீங்கும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர வேண்டும்.

உடல் பருமன் குறைய...

வாய்விளங்கம் 50 கிராம், ஓமம் 50 கிராம், சீரகம் 50 கிராம், சுண்டை வற்றல் 50 கிராம், சிறுபீளை வேர் 50 கிராம், மாதுளை ஓடு 50 கிராம், சாரணை வேர் 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து தூள் செய்துகொள்ளவும். இந்தத் தூளை காலை- இரவு இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

ஆண்மைக் குறைபாடு நீங்க...

பூனைக்காலி விதை 50 கிராம், தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம், நிலப் பனங்கிழங்கு 50 கிராம், நத்தை சூரி விதை 50 கிராம், சாலாமிசிரி 50 கிராம், சிறுபீளை 50 கிராம், அமுக்கரா 50 கிராம் எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் கலந்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை ஒரு ஸ்பூன் வீதம் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைபாடு, கை- கால் நடுக்கம் போன்றவை முற்றிலும் குணமாகும்.

நமது உடம்பு விஷமித்தால் நமது சிந்தனை விஷமிக்கும்; செயல்பாடு குறையும். பிறவிப் பயன் பெறுவது பெரும் சிக்கலாகும். எனவே சிறுபீளையைச் சரணடைந்து சிறப்பான பலன் அடைந்து ஈசன் அருளால் நல்வாழ்வு வாழ்வோம்!

Saturday, January 15, 2011

வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை

சுகாதாரமான வாழ்க்கை, சுத்தமான நீர் என என்னதான் கவனமாக வாழ்க்கை நடத்தி வந்தாலும்கூட, பலவகையான நுண்கிருமிகள் காற்று, நீர், உண்ணும் உணவு மற்றும் உடலிலுள்ள காயங்களின் மூலமாக உடலில் புகுந்துவிடுகின்றன. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள், உணவகங்களில் உணவு உண்பவர்கள், திருமணம் போன்ற விசேஷங்களில் விருந்து உட்கொள்பவர்கள் வயிற்று உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.

முதலில் ஏப்பம், வயிறு ஊதல், வயிற்றுப் பொருமல் எனத் தொடங்கும். இது நாள் செல்லச்செல்ல கடும் வயிற்றுவலியை ஏற்படுத்தி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் நாளுக்கு நாள் உணவின் மேல் வெறுப்பு உண்டாகி எதை சாப்பிட்டாலும் வயிறு பாதிக்குமோ என எண்ணத் தோன்றும். சுத்தமான உணவை உட்கொண்டு நுண்கிருமிகள் நீக்கப்பட்ட நீரை அருந்தி வருவதே வயிற்று தொல்லைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழியாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பழங்களையும், செரிமானப் பாதையை பலப்படுத்தும் நார்ச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகளையும் உட்கொள்வதே நல்லது. உணவுப்பாதையில் தோன்றும் நுண்கிருமிகளை நீக்கி, அதனால் தோன்றும் வயிற்றுவலியைக் கட்டுப்படுத்தும் அற்புத மூலிகைதான் நிலக்குமிழ் என்ற குமிழம்.

ஜெம்லினா ஏசியாட்டிகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெர்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருஞ்செடி வகையான நிலக்குமிழஞ் செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலைகளும், வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. நிலக்குமிழ் இலை மற்றும் வேர்களிலுள்ள பியுரோபியுரான் வகையைச் சார்ந்த லிக்னான்கள் -கோலி மற்றும் ஸ்டெபிலோகாக்கஸ் வகையைச் சார்ந்த நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தவை என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

நிலக்குமிழ் வேர், சிறுதேக்கு, தேவதாரு, நிலவேம்பு, பப்படப்புல், கொட்டை நீக்கிய கடுக்காய், தோல் நீக்கிய சுக்கு, நார் நீக்கப்பட்ட கோரைக்கிழங்கு, தோல் நீக்கிய வசம்பு ஆகியவை சம பங்கு, பொரித்த பெருங்காயம் கால்பங்கு ஆகியவற்றை எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 35 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டுக் காய்ச்சி, 125 மிலியாக சுண்டிய பின்பு வடிகட்டி, தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர மேல் வயிற்றுவலி, நாட்பட்ட இருமலால் தோன்றிய வயிற்றுவலி மற்றும் கிருமியால் தோன்றிய குடற்புண்கள் ஆகியன நீங்கும். உடல் உஷ்ணத்தால் தோன்றும் வயிற்றுவலி நீங்க நிலக்குமிழ் இலைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்துவர உடல் உஷ்ணம் தணியும். இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடமிட மூட்டுவலி நீங்கும்.


Sunday, February 14, 2010

முடி வளர உதவும் வைத்திய முறைகள்

முடி உதிர்வதை தடுக்க
 • வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
 • கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
 • வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
 • கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
 • நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக:
 • ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
 • காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
 • அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
 • மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
 • தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
 • முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
 • கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
 • காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
 • நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
 • நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Friday, January 15, 2010

போக முனிவரின் - சித்தாதி லேகியம்பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போக முனிவர் நோய்களுக்கான விதிமுறைகள் அடங்கிய நூலை மூன்று காண்டங்களாக பாடியுள்ளார். அவற்றின் ஒரு பிரிவுதான் இந்த சித்தாதி லேகியம். இதன் மூலம் குணமாகும் நோய்கள் பாண்டு , சோகை , பெரு வ்யிறு , பீலி , பித்தம் , கிராணி, காமாலை சித்த மருத்துவ முறையின் மூலம் குணமாக்க முடியாத அனைத்திற்கும் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இவற்றை பயன்படுத்துவதில் சுயநலம் இருக்க கூடாது. பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இருக்க கூடாது.
இந்த லேகிய தயாரிப்பை எனது பிளாக்கில் எழுதுவதன் நோக்கமே அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் . ஆனால் லேகியம் பற்றி எழுத ஆர்வமூட்டியவர் Abdul Farook.


செய்முறை :
 1. நூறு பலம் கொண்ட எடைக்கு புளிய இலையை எடுத்துக்கொள்ளவும். உலர்ந்த நீர்முள்ளி , கரிசாலை , கீழ்க்காய் நெல்லி, ஆகியவற்றை வகைக்கு பத்து வீதம் எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகப் போட்டு இடித்துத் தூள் செய்து ஒரு பாத்திரத்தினுள் போடவும்
 2. பாத்திரத்தினுள் போட்டவுடன் பதினாறு மரக்கால் அளவு தண்ணீரை விட்டு நன்றாக கலக்கவும். துருப்பிடித்த இரும்பைத் தீட்டி அதன் தூளை சேர்த்து காய்ச்சவும். எட்டில் ஒரு பங்காய் ஒன்றாய் சுண்டியதும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
 3. இதனுடன் ஒரு படி நல்லெண்ணெய் , எலுமிச்சை பழச்சாறும் விடவும். பின் வெள்ளாட்டு பால் வகைக்கு ஒரு படியும் ஊற்றவும்.
 4. அதன் பிறகு ஒரு படி நெல்லிக்காய் சாறு , ஒரு படி முசு முசுக்கை சாறு , பேய்க் குமட்டிச் சாறு , மாதுளையின் சாறு இவற்றுடன் கற்றாழை , பிரமி, இஞ்சிச் சாறு இவற்றையும் கலந்து பொங்கச் செய்யவும்.
 5. பழைய பனை வெல்லம் பத்து பலம் எடுத்து அதில் கரைத்திடவும். பிறகு மீண்டும் அடுப்பில் ஏற்றி எரிக்கவும்.
 6. கலவை குழைந்து குழம்புப் பதம் வரும்வரை பார்த்திருக்கும்.பின் திரிகடுகு, திரிபலாதி, கருஞ்சீரகம் , கிராம்பு , ஏலக்காய் , தாளிசை , ஓமம் , மரமஞ்சள் , சிங்கி, அதிமதுரம், சாதிக்காய், மஞ்சி , நாகப்பூ, கடுகரோகணி ஆகியவற்றுடன் விளாவரிசி , காட்டத்திப் பூ , வெட்பாலை , அரிசி, சந்தனம் , அத்தி , திப்பிலி, நெற்பொரி , திப்பிலி மூல்ம் தூதுவளை முட்கா வேளை ஆகியவற்றின் வேர்கள் வகை ஒன்றுக்கு கால் பலம் வீதம் எடுத்துக்கொள்ளவும்.
 7. எடுத்துக்கொண்ட வேர்கள் அனைத்தையும் இளவறுப் பாய் வறுத்து இடித்து சூரணமாக்கி பாலூடன் கலக்கவும். ஆயிரம் ஆண்டுக்கு முன்பான மிகப் பழமையான திட்டம் நாலூ பலம் வாங்கி சுத்தி செய்து இடித்துப் பொடி செய்து மேல் சொன்னவற்றுடன் கலக்கவும். பிறகு அடுப்பில் ஏற்றிக் காய்ச்சும் போது மெழுகுப் பதம் வரும் வரை கிண்டி விடவும்.
 8. மெழுகுப் பதமாகி லேகியமாய் இறக்கிக் கொள்ளவும். பிறகு லேகியத்தை முறைப்படி தானியப் புடமிட்டு பத்திரப்படுத்தவும். விநாயகர் அடிபணிந்து நாள் ஒன்றுக்கு காலை , மாலை வேளைகளில் கொட்டைப் பாக்களவு எடுத்து ஒரு மணடலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
 9. குணமாகும் நோய்கள் : பாண்டு , சோகை , பெருவயிறு , பீலி, பித்தம், கிராணி போன்ற அனைத்தும் குணமாகும்.